உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் என்ற அடையாளம் இருந்தாலும், தனது நடிப்பால் மக்களின் மனதில் இடம்பெற்றவர் அக்ஷரா ஹாசன்.  பால்கி இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். முதல் படத்திலே அமிதாப் பச்சன், தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து அசத்தினார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி தந்தார் அக்ஷரா. கடந்த ஆண்டு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார் அக்ஷரா.

சமீபத்தில் அக்ஷராவின் மேக்கப் கலைஞரான சச்சினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சச்சின் தாதா மரணத்தால் அக்ஷரா சோகத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். 

தற்போது அக்ஷரா நடித்துள்ள புதிய படம் குறித்த சுவையூட்டும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ட்ரெண்ட் லௌட் தயாரிக்கும் இந்த படத்தை ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ளார். அமெரிக்க மாப்பிள்ளை எனும் வெப்சீரிஸ் மூலம் திரை ரசிகர்களை ஈர்த்தவர் இவர். டீனேஜ் பருவத்திற்கும், ஸ்மார்ட்டான பெண் பருவத்திற்கும் இடையே உள்ள கேரக்டரில், பெண்மையை போற்றும் விதமாக நடித்துள்ளார் அக்ஷரா. இதன் முதல் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ளது என இயக்குனர் தெரிவித்துள்ளார். 

அக்ஷரா கைவசம் அக்னிச் சிறகுகள் படம் உள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். 

சீனுவாக விஜய் ஆண்டனி, விஜியாக அக்ஷரா ஹாசனும், ரஞ்சித் எனும் பாத்திரத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.