மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்து கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இயக்குனர் சச்சி எழுதி இயக்கிய ஐயப்பனும் கோசியும் படத்தில் கௌரி நந்தா மற்றும் அண்ணா ராஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

தென்னிந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. முன்னணி தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பிரபலத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன்.S இசையமைக்கிறார். முன்னணி இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் வசனங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகை ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் இணைந்துள்ளார். 

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகை நித்யா மேனன் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். 

அடுத்ததாக நித்யா மேனன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் (நிண்ணிலா நிண்ணிலா) தீனி மற்றும் மலையாளத்தில் 19(1)(a) ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் 19(1)(a) படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.