தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிகராகவும் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அடுத்ததாக  இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. அதை தொடர்ந்து நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணேகலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் மாமனிதன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

தொடர்ந்து ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். 

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த முக்கிய அறிவிப்பை இன்று இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்   என அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் திரைப்படம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.