தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்கை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். 

சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, ஜகமே தந்திரம், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த சௌந்தரராஜா இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சௌந்தரராஜா, தர்மதுரை படத்திற்கு பிறகு ,சீனு ராமசாமி அண்ணாவின் புதிய படத்தில் இன்று முதல் பயணம். அண்ணனுடன் பயணிப்பது எனக்கு எப்போதும் பேரானந்தம்., அதுமட்டும் அல்ல காலத்திற்கும் அழியா பயணம். மற்றும் நண்பர் ஜிவி பிரகாஷ் & காயத்ரி உடன் சேர்ந்து நடிப்பது மேலும் சந்தோசம்...என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த தர்மதுரை படத்தில் நடித்திருந்த சௌந்தரராஜா தற்போது இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.