தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரஷாந்த் இயக்குனர் பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், இயக்குனர் R.K.செல்வமணியின் செம்பருத்தி, இயக்குனர் மணிரத்தினத்தின் திருடா திருடா, இயக்குனர் ஷங்கரின் ஜீன்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் இதயத்தில் இடம் பிடித்தார்.
 
அடுத்தடுத்து ஆண்மகன், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, ஹலோ, ஆசையில் ஓர் கடிதம், அப்பு, சாக்லேட், மஜ்னு, தமிழ், வின்னர் என வரிசையாக பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த நடிகர் பிரஷாந்த் தன்னுடைய அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்டுக்காக நீண்டகாலமாக காத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். வின்னர் திரைப்படத்திற்கு பிறகு வந்த அநேக திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் பிரசாந்த் டாப் ஸ்டார் தான்.

இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட இயக்குனர் தியாகராஜன் அந்தகன் திரைப்படத்தை இயக்குகிறார். பாலிவுட்டில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடிக்கிறார்.

மேலும் ஊர்வசி, K.S.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், சமுத்திரகனி, யோகிபாபு, மனோபாலா, வனிதா விஜயகுமார், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

கடந்த வருடம் தொடங்கப்பட்ட அந்தகன் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைபட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற அந்தகன் படப்பிடிப்பு தற்போது  நிறைவு பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்களும் புகைப்படங்களும் இன்று வெளியாகியுள்ளன. விரைவில் அந்தகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.