தளபதி விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுக்ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஜீவாவின் டிஷ்யூம், நகுலின் காதலில் விழுந்தேன், தளபதி விஜய்யின் வேட்டைக்காரன், நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன், நடிகர் விஷாலின் வெடி உள்ளிட்ட  பல தமிழ் திரைப்படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து சலீம் பிச்சைக்காரன் சைத்தான் எமன் காளி கொலைகாரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் அக்னிசிறகுகள் உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. பிச்சைக்காரன் திரைப்படத்தை நடிகர் & இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. 

இதனை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் A.R.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல்முறையாக இயக்குனராக களமிறங்கும் விஜய் ஆண்டனி இயக்கத்தில் தயாராகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.