தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஆர்யா கடைசியாக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா கதாநாயகியாக நடித்த டெடி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருந்தார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்த  டெடி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு OTT யில் வெளியான பிறகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இதுவரை தொலைக்காட்சி வரலாற்றிலேயே TRP யில்  எந்த திரைப்படமும் அடையாத வரலாற்றுச் சாதனையை அடைந்தது. 

இந்நிலையில் ரெடி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் நடிகர் ஆர்யா இணைய உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியானது. முழுக்க முழுக்க ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக அமைய இருக்கும் இந்த புதிய திரைப்படம் டெடி திரைப்படத்தின் தொடர்ச்சி இல்லை எனவும் புதிய கதைக்களத்தில் அமைய உள்ளது என்ற தகவலும் வெளியானது. 

முன்னதாக நடிகர் ஆர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் அடுத்ததாக தற்போது சக்தி சௌந்தர்ராஜன் உடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மௌனகுரு மற்றும் ஆர்யா நடித்த மகாமுனி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் ஆர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.