தமிழ் சினிமாவில் நடிகர் அருண் விஜய் , பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வந்தார். தொடர்ந்து மாஞ்சா வேலு, தடையறத் தாக்க உள்ளிட்ட அதிரடி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகன் ஆனார்.
 
இதனையடுத்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜீத் குமாருடன் இணைந்து இவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் விக்டர் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
 
கடைசியாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த தடம் மற்றும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியா சாப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக மூடர்கூடம் திரைப்படத்தின் இயக்குனர் நவீன் இயக்கும் அக்னிசிறகுகள் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

அக்னிச்சிறகுகள் திரைப்படத்தில் நடிகர்கள் அருண்விஜய், விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா தயாரிக்கும் அக்னிசிறகுகள் திரைப்படத்திற்கு  இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். மும்முரமாக நடைபெற்று வரும் அக்னிச்சிறகுகள் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் நடுவே இப்படத்தின் முக்கிய தகவல் வெளியானது. 

நடிகர் அருண்விஜய் அக்னிச்சிறகுகள் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முற்றிலுமாக முடித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அக்னிச்சிறகுகள் திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக நடிகர் அருண் விஜய் பாக்சர், சினம் மற்றும் பார்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.