தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு இனி அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில்,  சீர்திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ் வழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு முன்பு வரை, தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்திருந்தால் தமிழக அரசுப்பணிகளில் 20 சதவீத முன்னுரிமை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

 Tamil medium candidates for govt jobs

ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த புதிய சீர்திருத்த மசோதாவின் படி, “இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே, அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்” வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.  

அதாவது, “தமிழக அரசு பணிகளில், பட்டப்படிப்பு தகுதியுடன், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளையும் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்றும், 10 ஆம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும்” என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியதும், ஆளுநரின் ஒப்புதல் பெற்று, பின்னர் அது சட்டவடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது