இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியை சேர்ந்த நமஹா என்பவர், இந்தியா என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாகவும், நாட்டின் சுதந்திரத்துக்காக தீவிரமாகப் போராடியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 Petition to rename India as Bharat

இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தியது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கிரீக் மொழியில் உள்ள இண்டிகா என்ற வார்த்தையிலிருந்தே இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதாக” வாதிட்டார்.

அதற்குப் பதில் அளித்த நீதிபதிகள், “இதுபோன்ற பெயர் மாற்றுவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவரும்படி நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது” என்று மறுத்துவிட்டனர். 

 Petition to rename India as Bharat

மேலும், “இந்தியா தற்போது ‘பாரத்’ என்றும் அழைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்தியாவின் பெயர் மாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை அணுகும்படி” மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

இதனையடுத்து, இந்த மனுவை கோரிக்கை மனுவாக கருதி முடிவெடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர். 

இதனிடையே, இதே கோரிக்கையுடன் நிரஞ்சன் பட்வால் என்ற சமூக ஆர்வலர், கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.