பள்ளிக்கூடத்துக்குத் துப்பாக்கியுடன் வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம் காத்தாக்கடை பகுதியைச் சேர்ந்த 38 வயதான லாஜி மார்ட்டின் தாமஸ், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள முளகுமூடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

teacher arrested

இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த அவர், வகுப்பு மாணவர்களிடம் தான் கொண்டு வந்த கை துப்பாக்கியைக் காட்டி உள்ளார். இதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் பள்ளிக்கூடம் முழுவதும் பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமை ஆசிரியர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, ஆசிரியர் மார்ட்டின் தாமசை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, இந்த கை துப்பாக்கியை அவர் இணையதளம் மூலம் வாங்கியது தெரிய வந்தது. மேலும், அது பொம்மை துப்பாக்கி என்றும், அந்த துப்பாக்கியைச் சுட்டால் குண்டுக்குப் பதிலாக, தீ வெளியேறியதும் தெரிய வந்தது. பொம்மை துப்பாக்கியாக இருந்தாலும், அதிலிருந்து தீ வெளியேறுவதால், அது அபாயகரமான பொருளாகக் கருதி, ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

teacher arrested

இதனிடையே, பள்ளிக்கூடத்துக்குத் துப்பாக்கியுடன் வந்த ஆசிரியரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் கூறப்படுகிறது.