ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சௌந்தரி திரையரங்கம் எதிரில் 28  வயதான சதீஷ்குமார், டூவிலரில் வந்துகொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த இனோவா கார் ஒன்று, அவரை வழி மறித்து நின்றுள்ளது. 

இதனால், பதறிப்போன சதீஷ்குமார், கன நேரத்தில் பிரேக் பிடித்து நின்றுள்ளார். அடுத்த வினாடியே, காரிலிருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல், கையில் அறுவாளுடன் சதீஷ்குமாரைக் கொலை செய்யப் பாய்ந்துள்ளது. இதனால், அதிர்ச்சியான அவர், தனது டூவிலை அங்கேயே போட்டுவிட்டு, ஓட்டம் பிடித்துள்ளார். இதனையடுத்து, உயிருக்குப் பயந்து அந்த வழியாகச் சென்ற பேருந்தில் ஏறியுள்ளார். 

பின்னாடியே காரில் விரட்டி வந்த கும்பல், பேருந்தை வழி மறித்து நின்றுள்ளது. இதனையடுத்து, காரிலிருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல், சதீஷ்குமாரை பேருந்திலேயே சராமறியாக வெட்டிவிட்டு, தப்பி ஓடியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார். இதனையடுத்து, பேருந்திலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது,  கொலையாளிகள் வந்த கார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த கொலைக் கும்பலைப் பிடிக்கத் தனி அமைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், கடந்த சில ஆண்டுகளாகத் தாய் - தந்தையரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இன்று அவர்களைக் காண நேரில் சென்றுள்ளார். அப்பொழுது தான், இந்த கொலை நடந்துள்ளது. செய்யாறில் ஓடும் பேருந்தில் நடந்த இந்த கொலை, அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.