போதையில் இளம் பெண்ணை துரத்திச் சென்ற போலீசார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் வன்னியன் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மனைவி சரண்யா, கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினர்களைப் பார்ப்பதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

policeman

அத்திப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே சென்றபோது, காவலர் சீருடையில் ஒருவர் தன்னை வேகமாகப் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்த அவர் பயந்துள்ளார்.

இதனையடுத்து, தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார். ஆனால், சரண்யாவை முந்திச் சென்று வழிமறித்து நின்ற அவர், “எங்கே செல்கிறாய்? நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் கண் அழகாக இருக்கிறது” என்று ஆபாசமாகப் பேசி வழிந்துள்ளார்.

இதற்குப் பதில் சொல்லிவிட்டுச் சட்டென்று அங்கிருந்து சரண்யா கிளம்புள்ளார். ஆனாலும், அந்தக் காவலர் சரண்யாவைப் மீண்டும் பின் தொடர்ந்துள்ளார். இதனால் பயந்துபோன சரண்யா, அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு கடையில் தஞ்சம் அடைந்துள்ளார்.

police man

அங்கேயும் விடாமல் துரத்திச் சென்ற அந்த காவலர், அந்த பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசியதாகத் தெரிகிறது. இதனால், பயந்துபோன அந்த பெண், தன் கணவருக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.

இதனையடுத்து ரவிக்குமார், அவரது நண்பர்களும் அத்திப்பாளையம் பகுதிக்கு வந்து, பொதுமக்களுடன் சேர்ந்து, காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரை சுற்றி வளைத்து கடுமையாக எச்சரித்துள்ளனர். அப்போது, அந்த காவலர் போதையிலிருந்தது தெரியவந்தது.

பின்னர், அப்பகுதி மக்கள் அவரை பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அவர் பெயர் பிரபாகரன் என்றும், அவர் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரின் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.

இதனிடையே, மதுபோதையில் பெண்ணை துரத்திச்சென்று ஆபாசமாகப் பேசிய காவல் துணை கண்காணிப்பாளரின் ஓட்டுநர் பிரபாகரன், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண்ணை தவறான நோக்கத்தில் காவலரே, துரத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.