காதலித்து ஏமாற்றப்பட்ட இளம் பெண் ஒருவர், தான் தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக காதலன் மற்றும் அவரது தாயாருக்கு போன் செய்து “உங்கள் மகன் என்னைக் கர்ப்பமாக்கியது தெரியும் தானே? இப்ப ஏன் என்னை வேண்டானு சொல்றிங்க? ப்ளீஸ் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கேள்வி கேட்டுக் கெஞ்சிய உருக்கமான ஆடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 24 வயது ராம்ஸி என்ற இளம் பெண், காதல் தோல்வி மற்றும் காதலனுடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்த பிறகு ஏமாற்றப்பட்டதால், கடந்த 3 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இளம் பெண் ராம்ஸி தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக, ஏமாற்றிய காதலன் மற்றும் அவரது தாயாருடன் மிகவும் உருக்கமாகப் பேசிய ஆடியோ வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அந்த ஆடியோவில், அங்குள்ள பல்லிமுக்கு பகுதியைச் சேர்ந்த தன்னுடைய காதலன் ஹரிஷ் என்பவரிடம் முதலில் பேசி உள்ளார். அதில், “ஹரிஷ், நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இந்த தண்டனை? எதற்காக நான் இப்படிச் சிரமப்பட வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நீங்கள் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு எடுக்கக் காரணம் என்ன? இந்த சமயத்தில் கூட நான் எப்படி அமைதியாக இருக்க முடியும்? 

என் கண்களுக்குத் தெரிவது இரண்டே இரண்டு விசயங்கள் தான். ஒன்று, நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள், இல்லையேல் நான் வாழவே விரும்பவில்லை” என்று, கண்ணீருடன் மிகவும் உருக்கமாகவே, அந்த பெண் பேசிய இருக்கிறார்.

இதனையடுத்து, அந்த கண்ணீர்த் துளிகளின் உருக்கமான பேச்சில் துளியும் மனம் இறங்காத காதலன், “எனக்கு 12 மணி நேரம் டைம் வேண்டும். நான் யோசிக்கிறேன்’ என்று, காதலன் ஹரிஷ் தெரிவித்து இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, இளம் பெண் ராம்ஸி, காதலன் ஹரிஷின் தாயாரிடமும் போனில் பேசுகிறார். அப்போது பேசிய காதலன் ஹரிஷின் தாயார், “நீ ஒரு நல்ல பையனைத் தேடி திருமணம் செய்து, நல்ல குடும்பத்தில் வாழ்ந்து நல்ல முறையில் வாழ வேண்டும். உன் மனதைத் தேற்றிக்கொள். இது தான் அனைவருக்கும் நல்ல முடிவு. என் கணவர் உன்னை நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனால், உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை நீ திருமணம் செய்து கொள்வது நம் அனைவருக்கும் நல்லது.

நீ அழகாக இருக்கிறாய். நீ நல்ல நிலையில், நல்ல வேலையில் இருக்கிறாய். உனக்கு என்று ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்று, கூறியுள்ளார். 

இதற்குப் பதில் அளித்துப் பேசிய அந்த இளம் பெண், “ ன் வேறு யாருடனும் வாழ விரும்பவில்லை. உங்கள் மருமகளாகவே வர விரும்புகிறேன். நீங்கள் நினைத்தால் நல்லது செய்ய முடியும். உங்கள் மகன் என்னுடன் அன்போடு நெருங்கிப் பழகியதும், என்னுடனே வாழ்ந்து என்னைக் கர்ப்பமாக்கினார் என்றும், உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படி எல்லாமும் தெரிந்த நீங்கள் என்னை ஏன் வேண்டாம் என்று சொல்றிங்க? எனக்கு ஏன் வளைகாப்பு நடத்தினீர்கள்?” என்று அடுத்து உருக்கமாகப் பேசினார். 

அதன் தொடர்ச்சியாக மீண்டும் காதலனிடம் பேசிய அந்த பெண், “ உங்களுக்குத் தேவைப்படும்போது நீங்கள் என்னைப் பயன்படுத்தி விட்டு, தற்போது வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? ஒருவேளை எனக்கு ஏதேனும் நேர்ந்தால், என் உடலைப் பார்க்கக் கூட வர வேண்டாம்” என்று இறுதியாகக் காதலன் ஹரிஷிடம் பேசிவிட்டு ராம்ஸி தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது, அந்த ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஹரிஷிடமும், அவரது தாயாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.