“என்னை கெடுத்துட்டான்.. என்னை கெடுத்துட்டான்..” என்று சத்தம் போட்டு ரணகளமாக்கிய பெண், கொடுத்த கடனை கேட்கச் சென்ற வங்கி அதிகாரியை கதற விட்டு காலில் விழ வைத்த சம்பவம் வைரலாகி வருகிறது. 

விவசாயிகளிடம் பணம் கொடுக்கும் வங்கிகள், அவர்கள் 3 மாதம் கட்டத் தவறினால் கூட, அவர்களைத் தீவிரவாதிகள் வங்கி அதிகாரிகள் நடத்துவார்கள் என்று, கடந்த காலங்களில் பல செய்திகளில் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதே நேரத்தில், பெரிய பெரிய பணக்காரர்களுக்குக் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு அதைக் கட்ட முடியவில்லை என்று பல பணக்காரர்கள் கை விரித்தாலும், அல்லது வெளிநாடு தப்பிச் சென்றாலும், அந்த பெரும் செல்வந்தர்களின் பக்கத்தில் கூட கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள் செல்வது கிடையாது என்ற குற்றச்சாட்டும் பரவலாக உண்டு. 

ஆனால், தற்போது நடைபெற்றுள்ள சம்பவம், அதற்கு நேர் எதிரானது. இந்த முறை கடன் பெற்ற பெண் ஒருவர், கடன் கொடுத்த வங்கி அதிகாரியைக் கதறவிட்டுள்ளார்.

பெங்களூரு இந்திரா நகரைச் சேர்ந்த சங்கீதா கோபல் என்ற பெண், அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, சங்கீதா கோபல் அந்த பகுதியில் உள்ள எஸ்.ஜி.ஜி.சி என்ற தனியார் வங்கியில் கடன் பெற்று மாதம் மாதம் தவணை கட்டி வந்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, சங்கீதா கோபலால் மாதத் தவணை கட்ட முடியவில்லை. இதனையடுத்து, வங்கி அதிகாரிகள் சங்கீதா கோபல் வீட்டிற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால், அதற்கும் சங்கீதா கோபல் தகுந்த பதில் அளிக்க வில்லை. 

இதனையடுத்து, வங்கியின் உயர் அதிகாரிகள் சங்கீதா கோபல் வீட்டிற்கு நேரில் வருகை தந்து உள்ளனர். அப்போது, சங்கீதா கோபல் வீட்டின் கதவைத் திறந்ததும், வங்கி அதிகாரிகள் கடனை கேட்டு சத்தம் போட்டுள்ளனர். 

இதனால், கடும் கோபம் அடைந்த சங்கீதா கோபல், தமிழ், ஆங்கிலம், கன்னடம் என்று தனக்கு தெரிந்த மொழிகளில் எல்லாம் வங்கி அதிகாரிகளைத் தெறிக்க விட்டுள்ளார். பட்டாசைப் போன்று வெடித்துத் தள்ளி சங்கீதா கோபலின் பேச்சில், வங்கி அதிகாரிகள் திணறிப் போய் நின்றனர். அவர்களால் எந்த பதிலும் பேச முடியவில்லை.

அப்படியும், வங்கி அதிகாரிகள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால், இன்னும் ஆவேசமான சங்கீதா கோபல் அந்த வங்கி அதிகாரியை அங்கிருந்து தள்ளி விட்டுவிட்டு, “என்னை கெடுத்துட்டான்.. என்னை கெடுத்துட்டான்..” என்பது போல் சத்தம் போட்டு கடும் கூச்சல் போட்டு உள்ளார். இதனால், வங்கி அதிகாரிகள் அனைவரும் ஆடிப்போனார்கள். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அதிர்ந்து போய் நின்றார்கள்.

இதனையடுத்து, “என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக” உங்கள் மீது வழக்குப் போடுவேன் என்று, அந்த பெண் கூறவே, அந்த வங்கி அதிகாரி வேறு வழி இன்றி, அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். 

இது தொடர்பான வீடியொ இணையத்தில் வைரலானது. இதனால், அங்குள்ள இந்திரா நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரியா என்ற பெண், “சங்கீதா கோபல் பெண் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்” என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக வங்கி அதிகாரிகளும், சங்கீதா கோபல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், வங்கி அதிகாரிகள் ஆட்களுக்குத் தகுந்தார் போல், கடனை வசூலிப்பதால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.