தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களால் விருந்தளிக்கவுள்ளார் விஷ்ணு.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எஃப்.ஐ.ஆர் திரைப்பட ஷூட்டிங்கை மிஸ் செய்வதாக பதிவு செய்துள்ளார். அத்துடன் விஷ்ணு பகிர்ந்த அப்புகைப்படத்தில் ஜ்வாலா கட்டாவும் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இந்த எஃப்.ஐ.ஆர் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார்.