தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார். தமிழில் யானைப்பாகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஜெயந்தி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழில் இயக்குனர் சிகரம் K.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் நகைச்சுவை மன்னன் நாகேஷ் உடன் பாமா விஜயம் & எதிர்நீச்சல், காதல் மன்னன் ஜெமினி கணேசன் உடன் இரு கோடுகள் & வெள்ளிவிழா, நடிகர் ஜெய்சங்கர் உடன் நூற்றுக்கு நூறு உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜெயந்தி.

மேலும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் அன்னை இல்லம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படகோட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக தமிழில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்த அன்னை காளிகாம்பாள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

இந்நிலையில் ஆஸ்துமா பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த அவதிக்குள்ளாகி இருந்த நடிகை ஜெயந்தி இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நடிகை ஜெயந்தியின் வயது 76. மறைந்த பழம்பெரும் தென்னிந்திய நடிகை ஜெயந்திக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Veteran Kannada #actorJayanthi passed away due to ill health at her residence on Monday. 76.
Having acted over 500 films, Jayanthi has won six State awards. #RIPJayanthi pic.twitter.com/XY5DLb4QP9

— NadigarSangam PrNews (@NadigarsangamP) July 26, 2021