நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்கள் முன்பு பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி. பி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கடந்த 5ம் தேதியில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனையில் இருக்கிறார். நேற்று இரவு அவரின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் நிலைமை குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த லாக்டவுனில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை பாடி வெளியிட்டார். மேலும் பாடகி ஜானகி அவர்களின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்களை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தனது குரலால் ரசிகர்களை ஈர்த்த SPB விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர் இசை பிரியர்கள்.