சாமானியர்கள் சினிமாவை பற்றி பேசாத நாட்களே இருக்க இயலாது. நடிகர்களே நாடித்துடிப்பு என ரசிகர்கள் இருப்பதால் தான் என்னவோ டென்ட்டுகொட்டா துவங்கி ஓடிடி வரை சினிமாத்துறை வளர்ந்துள்ளது. இந்த நடிகர் என்ன செய்கிறார்? அந்த நடிகையின் அடுத்த படம் என்ன ? தற்போதைய சினிமா நிலவரம் எப்படி உள்ளது...என்று பல கேள்விகளுக்கு தொடர்பாக இருக்கும் மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர் "டைமண்ட் பாபு" பற்றிய பதிவு தான் இது.

டைமண்ட் பாபு - திரைத் துறை மற்றும் பத்திரிக்கை துறையில் இந்த பெயரை அறியாத நடிகர்களோ, தொழில்நுட்ப கலைஞர்களோ இருக்க முடியாது. "காலத்தை வென்ற அப்டேட்" முதல் "கரண்ட் அப்டேட்" வரை கரைத்து குடித்தவர்.

தற்போதைய சினிமா பற்றியும், அவரது திரைப்பயணம் பற்றி தெரிந்துகொள்ள தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டோம். கடிகாரத்திற்கு நேரம் கற்றுத்தருவா வேண்டும்.....செய்தி தொடர்பாளர் அல்லவா, சரியான நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

சினிமாவுக்கு வரதுக்கு முன்னாடி, ஆரம்ப காலம் பத்தி சொல்லுங்க !!!

அப்பா "பிலிம் நியூஸ் ஆனந்தன்" அவர தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. நான் டெல்லி-ல அப்பாவோட தங்கச்சி வீட்டில இருந்தேன். ஸ்கூல், காலேஜ்லாம் அங்க தான் படிச்சேன். அதுக்கு அப்றோம் பேங்க்-ல வேலைக்கு சேர்ந்தேன். நான் தமிழன் தான், ஆனா தமிழ்ல ரொம்ப வீக்.. டெல்லில படிச்சதுனாலவோ என்னமோ, ஆரம்பகாலத்துல தமிழ் சரியா வரல ! கொஞ்ச கொஞ்சமா புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன்.

டைமண்ட் பாபு-னு பெயர் எப்படி வந்தது ?

அப்பாவோட கான்டாக்ட்ஸ் வச்சு பிலிம் அசோசியேஷன் ஒன்னு ஆரம்பிச்சேன். பிலிம் கிளப் மாதிரி எங்க பேங்க் ஊழியர்களுக்காக மட்டுமே அத ஆரம்பிச்சேன். புதுப்படங்கள் எல்லாம் ஸ்க்ரீன் பண்ணுவேன். வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ்னா ஞாயிற்றுகிழமை நான் அந்த படங்கள எங்க ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸ்காக போட்டு காட்டுவேன். அந்த கிளப்க்கு டைமண்ட்னு கிளப்னு பேர் வச்சேன். இதான் பாபு "டைமண்ட் பாபு" ஆன கதை.

PRO-னு முதல் முதல்ல எந்த படத்துல கமிட் ஆனீங்க ?

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் பசங்க Murder Echo-ன்ற குறும்படத்த பெரிய படமா எடுக்கணும்னு நினைச்சாங்க. சிவாஜி சார், சிவகுமார் சார்னு எல்லாரையும் ட்ரை பண்ணோம். அப்றோம் விஜயகாந்த் சார் நடிச்சு கொடுத்தாரு. அந்த படம் தான் "ஊமை விழிகள்". அதிலிருந்து தான் PRO டைமண்ட் பாபு-னு வந்துது.

உங்க தந்தை பிலிம் நியூஸ் ஆனந்தன் உங்களுக்கு சொல்லி கொடுத்த பாடம் ?

பிரஸ்மீட்டோ, புதுப்பட ஸ்க்ரீனிங்கோ...நிகழ்ச்சிக்கு வர பத்திரிக்கையார்கள மல்லிபூ போட்டு வரவேற்பேன். இது எனக்கு எங்க அப்பா சொல்லிக்கொடுத்த பாடம்.

உங்க கிட்ட ரொம்ப உரிமையோடு பழகுன சினிமா நடிகர்கள் யார் யார் ?

இப்படி கேட்ட எப்படி... எல்லாரும் தான். சிவாஜி சார சொல்லலாம். நான் சினிமாவுக்கு ஏன் வந்தேன்னு என்ன அடிக்கடி திட்டுவாரு. ஆனந்தன் பையன் நீ, நிறையா படிச்சிருக்கனு சொல்லுவாரு. இப்போவரைக்கும் நடிகர்கள் எல்லாரும் என்கிட்ட உரிமையோட பழகுவாங்க, அதுனால தான் இப்போவும் PRO-வா உழைச்சிட்டு இருக்க முடியுது.

மறக்க முடியாத பாராட்டுனா எத சொல்லுவீங்க ?

இப்ரஹிம் ராவுத்தர் சாரும், விஜயகாந்த் சாரும் சேர்ந்து முப்பெரும் விழா ஒன்னு வள்ளுவர் கோட்டத்துல நடத்துனாங்க. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அந்த விழாவுக்கு வந்திருந்தாரு. விழாவுல எல்லாருக்கும் ஷீல்டு தந்தாங்க. அதுக்கு அப்றோம் என்ன விஜயகாந்த் சாரும், ராவுத்தர் சாரும் கலைஞர் கிட்ட அறிமுகப்படுத்தி வச்சாங்க. அவர் எனக்கு பொன்னாடை போத்தி கௌரவப்படுத்துனத மறக்கவே மாட்டேன்.

சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அனுபவம் பத்தி சொல்லுங்க !

எங்க அப்பா சிவாஜி ஃபிலிம்ஸ்ல ஸ்டாஃப். வெற்றி விழா படத்தப்போ ராம்குமார் சார், பிரபு சார் என்கிட்ட பேசுனாங்க. அப்போ துவங்கி சந்திரமுகி, அசல் வரைக்கும் நான் தான் PRO-ஆ பணியாற்றுனேன்.

சமீபத்துல வந்த "விக்ரம்" படத்தோட போஸ்டர்ல உங்க பேரு இருந்துது...அத பத்தி சொல்லுங்க !!

கமல் சார் நடிக்கிற படம்ல. எல்லாரும் போன் பண்ணி வாழ்த்துனாங்க. ஹீரோ, டைரக்டர், மியூசிக் டைரக்டர் பெயரோட PRO-னு பேர் வரது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

PRO-ஆ உங்க திரைப்பயணத்துல மறக்க முடியாத சம்பவம் ஏதாச்சு இருக்கா ?

ஒரு ட்வீட் என்னால மறக்கவே முடியாது. கிரேசி மோகன் சார் இறப்பு செய்தி தான் அது. கிரேசி மோகன் சாரோட பையன் எனக்கு போன் பண்ணி அப்பா இறந்துட்டாரு, எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கனு சொன்னாரு. நானும் ட்வீட் பண்ணிட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு சார் ஆபீஸல இருந்து ஹார்ட்-பீட் இன்னும் இருக்குனு சொன்னாங்க, அத கேட்டுட்டு நான் ஆடிப்போயிட்டேன் சார். தப்பான செய்திய போட்டுட்டோமோனு ரொம்ப ஃபீல் பண்ணேன். என் பக்கம் எந்த தவறும் இல்லனாலும், ஒரு செய்திக்காக இப்படி பண்ணிட்டான்னு யாரும் சொல்லிட கூடாதுல. அதுனால தான் இப்போ வரைக்கும் எந்த செய்தியா இருந்தாலும், பொறுமையா நல்லா விசாரிச்சிட்டு கடைசியா ட்வீட் போடுவேன்.

தியேட்டரா-ஆ , ஓடிடி-ஆ எது பெஸ்ட்னு சொல்வீங்க ?

தயாரிப்பாளர்களோட முடிவு தாங்க அது. தியேட்டர் தான் என்னைக்கும் கொண்டாடத்த தரும். ஓடிடி ஒரு cup of cofee மாதிரி அந்த நேரத்துக்கு குடிச்சு என்ஜாய் பண்ணிக்கணும். சில விஷயங்கள் மாறாதுனு சொல்வாங்க அதுல தியேட்டரும் ஒன்னு.

35 வருஷ அனுபவத்த 35 நிமிஷத்துல நம்ம கூட எதார்த்தமா பகிர்ந்துகிட்ட இந்த மனுஷனா பாக்குறப்போ எனர்ஜியா இருக்கு.. தரமான படங்களை பெற்றெடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள் என்றால், அதற்கு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் இந்த PRO-க்கள். இப்படிப்பட்ட திரைவாசி டைமண்ட் பாபு அவர்களின் திரைப்பயணத்தை நம் சுவடுகளில் பதிப்பதில் பெருமை கொள்கிறது கலாட்டா.