தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். இம்மாதம் 9-ம் தேதியிலிருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர் படக்குழுவினர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் மாமியார் சீதா அம்மா மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். வெங்கட் பிரபுவின் துணைவியார் ராஜலக்ஷ்மி அவர்களின் தயார் ஆவார். இதுகுறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ளார். இச்செய்தி அறிந்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு கைவசம் லைவ் டெலிகாஸ்ட் என்கிற திகில் வெப் சீரிஸ் உள்ளது. இதில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் ஆகியோர் நடித்துள்ளனர். பேய் இருக்கும் வீட்டுக்குள் நுழையும் திரைப்படக் குழுவினர் என்ன அனுபவங்களை சந்திக்கின்றனர் என்பதைப் பற்றிய தொடர் இது. சமீபத்தில் இந்த வெப்சீரிஸின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சில நாட்கள் முன்பு விக்டிம் என்ற ஆந்தாலஜியின் அறிவிப்பு வெளியானது. இதில் இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பா. ரஞ்சித், சிம்பு தேவன் மற்றும் ராஜேஷ் இணைந்து அவர்களது படைப்புக்களை சமர்பிக்கவுள்ளனர். பிளாக் டிக்கெட் தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்கிறது. ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி இதை வழங்குகிறது. விரைவில் இதில் நடிக்கும் நடிகர்களின் விவரமும், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் விவரமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.