2020ம் ஆண்டு முழுவதும் வலிமை படம் தொடர்பாக அப்டேட் கேட்டு சோர்த்து விட்டார்கள் தல அஜித் ரசிகர்கள். ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. அதனால் அப்டேட் கேட்டு அவ்வப்போது ஏதாவது ஒரு ஹேஷ்டேகை ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என்று எதற்குமே அப்டேட் வராதது ரசிகர்களை கவலை அடைய செய்தது. வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்கள் இந்நாள் வரை கொண்டாடி வந்தார்கள். புத்தாண்டுக்கு அப்டேட் கொடுங்கஜி என்று போனி கபூரிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் அஜித் தன் வலிமை குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அது படக்குழு வெளியிட்டது இல்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வலிமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் திரை விரும்பிகள். இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் மிக இளமையாக அஜித் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். Valimai திருவிழா ஆரம்பம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

வலிமை படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் துவங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. வலிமை படத்தை பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக கூறப்படுகிறது.