2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இப்படம் அமேசான் ப்ரைமில் தீபாவளி விருந்தாக, வரும் நவம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்திய விமானப்படையிடம் இருந்து NOC சான்றிதழும் கிடைத்துவிட்டது.

கடந்த வாரம் வெளியான ட்ரைலர் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. சூர்யாவின் அசத்தலான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் சூரரைப் போற்று படம் தொடர்பாக நடிகை லக்ஷ்மி மன்சுவிற்கு நன்றி கூறி பதிவு ஒன்றை செய்துள்ளார் சூர்யா. அதற்கு காரணம் சூரரைப் போற்று படத்தில் நடிகர் மோகன் பாபு நடிக்க முக்கிய காரணம் அவரது மகளான லக்ஷ்மி மன்சு தானாம். இப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி. விரைவில் படத்தை போட்டு காண்பிப்பேன் என்று கூறி பதிவு செய்துள்ளார் சூர்யா.

பக்தவச்சலம் நாயுடு என்ற பாத்திரத்தில் நாயகன் நெடுமாறனின் வழிகாட்டியாக சூரரைப் போற்று படத்தில் பயணித்துள்ளார் நடிகர் மோகன் பாபு. தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மோகன் பாபு. 70களில் திரையுலகில் நுழைந்தவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு அல்லாது தமிழ் திரையுலகிலும் சிறந்த நடிகராக ஜொலித்தவர்.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அண்ணை ஓர் ஆலயம், கமல் ஹாசனுடன் குரு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் மோகன் பாபுவுக்கு மனோஜ் மஞ்சு, விஷ்ணு மஞ்சு ஆகிய மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கின்றனர். முன்று பேரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர். லட்சுமி மஞ்சு, தமிழிலும் கடல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

Can’t wait to show you the film! All credits to you @LakshmiManchu thank you for convincing @themohanbabu sir 🙏🏽❤️ what a blessing! https://t.co/w7mp92XIaf

— Suriya Sivakumar (@Suriya_offl) October 29, 2020