தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று.

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்து வருகிறார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லையே என்ற சோகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து தான் வருகிறது. இருப்பினும் கொரோனாவால் ஏற்பட்ட இந்த சூழ்நிலையில் ரசிகர்களின் நலன் கருதி சூர்யா இந்த ஒரு முடிவை எடுத்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனையடுத்து மீதம் உள்ள பாடல்கள் மற்றும் ட்ரைலருக்காக ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி இயக்குனர் விருமாண்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி சூர்யா சார். சூரரைப் போற்று திரைப்படத்தில் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பு நிறுவனம் 2D என்டர்டெயின்மென்ட்டுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் விருமாண்டி மறைந்த குணச்சித்திர நடிகர் பெரிய கருப்பு தேவரின் மகன் ஆவார். சூரரைப் போற்று படத்தில் சூர்யா மதுரை தொனியில் சரியாக பேச வேண்டும் என்பதற்காக விருமாண்டி மற்றும் செந்தில் ஆகிய இருவரை படக்குழு நியமித்தது. டப்பிங்கில் செந்திலும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் விருமாண்டியும் சூர்யாவின் மதுரை தொனியை மெருகேற்றினர். டீஸர் மற்றும் மேக்கிங் வீடியோவில் வரும் காட்சிகள் அதற்க்கு சான்று. சமீபத்தில் விருமாண்டி இயக்கத்தில் க.பெ. ரணசிங்கம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்து விட்டு நடிகர் சூர்யா விருமாண்டி அவர்களை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Thank you so much for your valuable words @Suriya_offl sir. It was my pleasure to work with you sir. Thanks for the opportunity #SudhaKongara @rajsekarpandian @2D_ENTPVTLTD and #SooraraiPottru team pic.twitter.com/sk1fqUIRNM

— virumandi (@pkvirumandi1) October 11, 2020