கொரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் தான் படப்பிடிப்புக்கு ரஜினி வருவார் என்றெல்லாம் இணையத்தில் தகவல் வெளியானது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று டிசம்பர் 13 சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குத் தனி விமானத்தில் பயணித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

டிசம்பர் 15-ம் தேதி முதல்தான் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், இன்று (டிசம்பர் 14) முதலே அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி முகக்கசவம் அணிந்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்ப்ரைஸாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இன்னும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாத நிலையில், இந்தப் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படப்பிடிப்பிலிருந்து டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்கும் நாள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, மீண்டும் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. ஏற்கனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், மீதி உள்ள 40 சதவீதப் படப்பிடிப்பும் இம்மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது என்ற தகவல் தெரியவந்துள்ளது.

Superstar Rajinikanth at #Annaatthe shoot ! pic.twitter.com/qqdpwtLtsb

— Sun Pictures (@sunpictures) December 14, 2020