சினிமாவில் தன்னை தானே செதுக்கி கொண்டவர் தல அஜித். திரைத்துறை மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ், பிஸ்டல் ஷூட்டிங் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பின் H.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் தல அஜித். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஷுட்டிங் நடந்தது.

தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்‌ஷனை அள்ளும் என போனி கபூர் யோசனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் அப்டேட்டுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகிறது. படக்குழு தரப்பில் இருந்து வலிமை படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழின் பேட்டி ஒன்றில் பேசிய வலிமை பட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்தின் தீம் மியூசிக் குறித்து பேசியிருந்தார். அதாவது கிட்டார் பயன் படுத்தாமல் படத்தின் பின்னணி இசையை கம்போஸ் செய்ததாக கூறினார்.

சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் உடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அஜித் சமூக வலைத்தளங்களில் இல்லாமல் இருந்தாலும், அவர் குறித்த பேச்சுகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாவது வழக்கம். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞரான லீ விட்டாக்கர் தல அஜித்துடன் மீண்டும் பணிபுரிவது பற்றி பேசியுள்ளார்.

தல அஜித்தின் ரசிகர் ஒருவர், எப்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து பணிபுரிய போகிறீர்கள் ? ஆரம்பம் படத்தில் நீங்கள் வடிவமைத்த ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் பேசப்பட்டது. குறிப்பாக போட்டில் வரும் ஸ்டண்ட் காட்சிகள். மீண்டும் உங்கள் காம்போவை பார்க்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த லீ விட்டாக்கர், நிச்சயம் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அஜித்துடன் மீண்டும் பணிபுரிவது, அவருக்கு ஸ்டண்ட் காட்சிகளை டிசைன் செய்வது என் மனதில் நின்ற ஒன்று. எங்கள் காம்போ மிகவும் ஃபன்னாக, ரசிகர்களுக்கு பிடித்தவாறு இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் பிஸியாக இருக்கும் லீ விட்டாக்கர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து ஆரம்பம் படத்தில் பணிபுரிந்தார். கடைசியாக சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் பேட்மேன், ஜுராசிக் பார்க், ஃபாஸ்ட் ஃபைவ் போன்ற ஹிட் படங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தவர், தல அஜித் குறித்து பேசியது தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

I would cherish the opportunity to design action and work with Ajith again. I think it would be a fun combo that audiences would like. https://t.co/vCYKsm5a2l

— Lee Whittaker (@1eewhittaker) November 1, 2020