இன்று நேற்று நாளை திரைப்பட புகழ் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள, இப்படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

படப்பிடிப்பு முடிந்தாலும், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய 10 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அயலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும், இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் செல்லம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சிவகார்த்திகேயன் அயலான் படத்துக்குப் பிறகு, நடிக்கவுள்ள படம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

It’s a WRAP for #Ayalaan 🥳 This film has been the greatest experience for us & we cannot wait for you to experience the grandeur & graphic extravaganza it has in store! This one’s going to be unlike anything you’ve ever seen before! 👽💥#AyalaanWrapUp @Siva_Kartikeyan pic.twitter.com/KjctpfYbED

— KJR Studios (@kjr_studios) January 24, 2021