தமிழில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் இயக்குனர் சேரன் அவர்கள் 2004ஆம் ஆண்டு இயக்கி நடித்த திரைப்படம் ஆட்டோகிராப். ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற இந்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் தேசிய விருது பெற்றது. அந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து இன்று வரை தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு பாடலாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலை எழுதிய கவிஞர் பா.விஜய் அவர்களுக்கும் இந்த பாடலை பாடிய பாடகி சித்ரா அவர்களுக்கும் தேசிய விருது கிடைத்தது.

ஒவ்வொரு பூக்களுமே பாடலின் பாடல் காட்சியில் இடம்பெற்றிருந்த பாடகர் கோமகன் அந்தப் பாடலில் வரும் “மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்” என 2 வரிகளை பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பார்வையில்லாத மாற்றுத் திறனாளிகளை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ராவை நடத்தி வருகிறார் கோமகன். கிட்டத்தட்ட 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இவர்தான் பார்வையாகவே இருக்கிறார்.

இந்தநிலையில் சில தினங்கள் முன்பு குறைவால் பாதிக்கப்பட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனையை செய்யப்பட்டார். அதையடுத்து கொரோனா உறுதியானதால் இரு வாரங்களுக்கு முன்பு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை ஐசிஎப் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சையில் இருந்த கோமகன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். பாடகர் கோமகனின் உயிரிழப்பு செய்தி அறிந்த இயக்குனர் சேரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது..
கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. pic.twitter.com/UrF3xebRO3

— Cheran (@directorcheran) May 6, 2021