சின்னத்திரையில் பிரபலமாகி ஹீரோவாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்து வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து, இயல்பான காமெடியால் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்கள் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு ஹீரோவாக நடிப்பது வழக்கமாகிவிட்டது. அப்படிதான் சந்தானமும் ஹீரோவானார். சந்தானம் தயாரித்து நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் மட்டும் சந்தானம் காமெடியனாக நடித்தார். ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிக்கவும் செய்தார்.

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் படம் பிஸ்கோத். இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. பிஸ்கோத் படத்தின் இறுதி கட்ட எடிட்டிங் பணிகளில் உள்ளதாக சமீபத்தில் இயக்குனர் ஆர். கண்ணன் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

தற்போது இந்த படத்தில் சந்தானம் ராஜா ராஜசிம்ஹாவாக நடிக்கிறார் என்று இயக்குனர் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல நாளிதழின் பேட்டியில் பேசியவர், சந்தானம் நடிக்கும் இந்த பாத்திரம் குறித்து கூறியுள்ளார். 18-ம் நூற்றாண்டில் வாழந்த அரசனாக சந்தானம் நடிக்கிறாராம். கிட்டதட்ட 30 நிமிடம் இந்த காட்சிகள் பிஸ்கோத் படத்தில் இடம் பெற்றுள்ளது என விவரித்துள்ளார். சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி, வேட்டையனாக வரும் காட்சிகள் குறைந்த நேரம் என்றாலும், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதே போல் சந்தானத்திற்கும் இந்த படம் அமைய அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இது தவிர்த்து கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் மூன்று வித்தியாசமான போஸ்டர்கள் கடந்த மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

King Rajasimha @iamsanthanam Rom-Com #Biskoth Coming Soon

Wait & Watch an unexpected one !! #BiskothTrailerSoon @masalapixweb @mkrpproductions @shammysaga @tridentartsoffl @johnsoncinepro @EditorSelva @radhanmusic pic.twitter.com/7bXs4naPl7

— kannan (@Dir_kannanR) July 22, 2020