திரையுலகின் சிறந்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். பிரேம்குமார் இயக்கத்தில் 96 தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளார் சமந்தா.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள சமந்தா உடற்பயிற்சி, யோகா, சமையல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். லாக்டவுனில் ரசிகர்களின் பதிவை கவனிப்பது என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்வதெப்படி என்ற டிப்ஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழங்கினார் சமந்தா.
அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பான ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்பு துவங்கியது. படக்குழுவினர் சார்பில் ஒரு டீஸர் வீடியோவையும் வெளியானது.
இதன் இரண்டாவது சீசனில் நடிகை சமந்தா நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவன் (மனோஜ் பாஜ்பாய்) ரகசியமாக தேசியப் புலனாய்வு அமைப்புக்கு வேலை செய்வதும், அதில் இருக்கும் சாகசங்களும், இடையில் வரும் குடும்பப் பிரச்சினைகளுமே ஃபேமிலி மேன் தொடரின் கதை.
முதல் சீசனில் நடிகை பிரியாமணி, ஷாரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார், குல் பனாக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். செப்டம்பர் 20-ம் தேதி ஸ்ட்ரீமிங்கில் வெளியான இந்தத் தொடர் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. தற்போது இரண்டாவது சீசனுக்காக தனது டப்பிங் பணிகளை முடித்து விட்டார் சமந்தா.
நடிகை சமந்தா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவும் நடிக்கவுள்ளனர். லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.