வரும் 31ஆம் தேதி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார் என்ற செய்தியை ஹைதராபாத் அப்போலோ மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 22ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது

ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் அவருக்கு,உடல் சோர்வு தவிர வேறு எந்த பிரச்சனையும் ரஜினிகாந்துக்கு இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்செய்தி அறிந்த சூப்பர்ஸ்டார் ரசிகர்கள், தலைவருக்கு எதுவும் இருக்கக்கூடாது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அப்போலோ மருத்துமனை நிர்வாகம் திடீரென அறிக்கை வெளியிட்டதால், ஆரம்பத்தில் மிகவும் அதிர்ச்சியாகினர் ரசிகர்கள். பின் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்பதை பார்த்தவுடன் சற்று அமைதியாகினர்.

தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

முறையான பாதுகாப்புடன் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படத்தில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இணையத்தில் செய்திகள் கிளம்பியது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், அண்ணாத்த படக்குழுவுக்கு வழக்கமாக நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதால், தற்போதைக்கு படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவலை தெரிவித்திருந்தது.