தென்னிந்திய ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு மலையாள திரைப்படம் பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் எழுதி இயக்கிய பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் நிவின் பாலி நடிக்க கதாநாயகிகளாக நடிகை சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அழகிய காதல் திரைப்படமாக வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் காட்சியமைப்புகளும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

பிரேமம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான கதாபாத்திரம் “மலர்”. நடிகை “சாய் பல்லவி” கல்லூரி ஆசிரியராக நடித்திருந்த இந்த மலர் கதாபாத்திரத்தைப் பற்றிய ஒரு ருசிகர தகவலை இன்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பகிர்ந்துள்ளார்.சாய் பல்லவி நடித்த இந்த மலர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை அசின் என தெரிவித்துள்ளார்.

முதலில் “இந்தக் கதையை எழுதும் பொழுது இந்த மலர் கதாபாத்திரம் கொச்சியில் இருந்து வரும் கதாபாத்திரமாக அமைக்கப்பட்டது” என்றும் அதற்காக நடிகை அசின் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் “இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை அசினை நான் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாமல் போனது. நடிகர் நிவின் பாலியும் முயற்சி செய்து அசினை தொடர்புகொள்ள முடியாததால் கதையில் அந்த கதாபாத்திரத்தின் சாயலை தமிழில் மாற்றினோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தன்னுடைய “இளமைப்பருவத்தில் ஊட்டியில் பயின்றதாலும் பிறகு திரைப்படக் கல்லூரி படிப்பை சென்னையில் படித்ததாலும் தமிழோடு இந்த வலிமையான இணைப்பு” இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை மலர் கதாபாத்திரத்தில் அசின் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என சமூக வலைதளங்களில் பலரும் பேசினாலும் இன்றும் மலர் கதாபாத்திரம் பற்றி நாம் பேசும் அளவிற்கு சிறந்த எதார்த்தமான .அழகான நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என சொன்னால் அது மிகையாகாது. மலர் கதாபாத்திரத்தைப் பற்றி மனம் திறந்த அல்போன்ஸ் புத்திரனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி ட்ரெண்டாகி வருகிறது.