தமிழ் திரையுலகில் மக்களின் வாழ்வியலை கொண்டு படமாக எடுக்கும் படைப்பாளிகளில் ஒருவர் இயக்குனர் பிரபு சாலமன். மைனா, கும்கி, தொடரி, கயல் போன்ற சீரான படங்களை தந்து ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக திகழ்கிறார். இவர் இயக்கத்தில் ராணாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ளது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

படத்தின் மேக்கிங் குறித்தும், யானைகளின் அருமை குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பிரபு சாலமன். சமீபத்தில் நிகழ்ந்த யானையின் மரணம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இது பற்றி அவர் பேசுகையில், இது போன்ற சம்பவம் வைரலானதால் தெரிகிறது. இந்தியாவில் கடந்த 10,15 வருடங்களில் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. உலகளவிலேயே அதிக யானைகள் கொண்ட நாடு என்ற இடத்தில் இரண்டாவதாக இருந்தது இந்தியா. நமக்கு பசி என்றால், கடலமிட்டாய் அல்லது ஏதாவது வாங்கி உண்டு நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். ஆனால் யானை ஒரு நாளைக்கு 250 கிலோ சாப்பிட வேண்டும். தண்ணீர் 100 லிட்டர் குடிக்க வேண்டும். யானைகள் வாழ்வியலில் சென்று யோசிக்க வேண்டும். பழங்களில் வெடி வைப்பது இறக்கமற்ற செயல். முந்தைய காலத்தில் பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க காட்டு பன்றிகள் வராமல் தடுக்க வெடி வைப்பார்கள். யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு. அதை இப்படி செய்ய எப்படி மனசு வந்தது. தயவு செய்து இதை ட்ரெண்ட் செய்து நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.