மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி திரைப்படம், ரம்யா கிருஷ்ணன் நடித்த குயின் என்ற இணையதள தொடர்களை தன் அனுமதியில்லாமல் எடுக்கப்படுவதால் தடை விதிக்கக்கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (16.04.2021) பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை உறுதிசெய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே, இந்த வழக்கில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் எனக் கூறும் தீபா, அவர் உயிருடன் இருந்தபோது தன்னால் சந்திக்க முடியவில்லை என பலமுறை கூறியிருந்ததையும், தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எந்த உரிமையும் இல்லாமல், உள்நோக்கத்துடன் தீபா தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி எனும் பெயரில் வெளிவரவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.இந்த படத்தில் எம்.ஜி.ஆர்-ஆக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து வேகமாக பரவி வருவதால் திரையரங்குகளில் 50 % இருக்கைகள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு படத்தை மீண்டும் தள்ளிப்போடுவதாக அறிவித்தனர்.