கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கை அறிவித்தது. இதனால் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா சார்ந்த பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரிலீஸுக்கு தயாராக இருந்த படங்கள் OTT-யில் வெளியாகவுள்ளது. இதனால் திரையரங்கங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுமையான முயற்சிகளுடன் பிரம்மாண்ட படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கும் திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சத்யராஜ் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம் குறித்து பேசியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரியுடன் இணைந்து திருப்பூர் சுப்ரமணியன் தயாரிக்கவிருக்கிறார் என்பதையும் தெரிவித்தார். இந்தப் படத்தின் தயாரிப்பில் பிரபல தயாரிப்பாளர் பிரமீட் நடராஜனும் பங்கு பெறுவதாகக் கூறியுள்ளார்.

ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு திரைத்துறையைச் சார்ந்த 200 பேர் முதலீடு செய்யவிருக்கிறார்களாம். விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து முதலீடு செய்யலாம் என்றும், முழுக்கதையும் தயாராகி, படப்பிடிப்பிற்கு முந்தைய நாளின் போதே முதலீடு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வியாபார அடிப்படையில் சதவிகிதத்தில் நடிகர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படம் முதலில் நேரடியாகத் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும், பிறகு 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் இடைவேளைக்குப் பிறகே ஒ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.