விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக முக்கிய ரோலில் நடித்துள்ளார். விருமாண்டி இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. கொரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சமுத்திரக்கனி, ராம், வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டி பதிவு செய்திருந்தார். பின்னணி இசைக்கான பணிகளை முடித்தார். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் புகழாரம் சூட்டினார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக நடித்திருக்கிறார். குறிப்பாக தண்ணீரை வியாபாரம் ஆக்கிய சிலருக்கு எதிராக அவர் போராட்டம் நடத்துவது போல படத்தின் டிரைலரில் காட்டப்பட்டிருந்தது.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இருந்து முதல் பாடலான அழகிய சிறுக்கி பாடலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. டி சீரிஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிரிக்கல் வீடியோவுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அழகிய சிறுக்கி பாடலுக்கு வைரமுத்து வரிகள் எழுத கோல்ட் தேவராஜ் என்பவர் பாடியிருந்தார்.

க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில் தியேட்டர்கள் தற்போது மூடப்பட்டு இருப்பதால், இதனை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியானது. தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் ஓர் சுவையூட்டும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. Zeeplex தளம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கபெ ரணசிங்கம் திரைப்படத்தின் போஸ்டர் இருந்ததால், இதை கொண்டாடி வருகின்றனர் திரை ரசிகர்கள். சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து தற்போது இந்த படமும் ஓடிடி-ல் வெளியாவதை காண ஆவலில் உள்ளனர் சினிமா பிரியர்கள்.

மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் ஒரு ஹேங்கவுட் படத்தில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து டாப்ஸி நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the magic of brand new blockbuster films at the comfort of your home on #ZeePlex, ab har ghar banega cinema ghar 📺 pic.twitter.com/40IzEbDbPV

— Zee Plex (@ZeeplexOfficial) September 10, 2020