ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் தற்போது ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக் மாஸ்டர் ஹிட்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர்.

பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று மார்ச் 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இன்று இரவு 9:30 மணி அளவில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களிடம் இரண்டாம் பாகத்தில் ஆதித்த கரிகாலன் உடைய பகுதிகள் எப்படி இருக்க போகிறது... முதல் பாகத்தின் இறுதியிலேயே ஆதித்த கரிகாலனின் இறப்பு இருந்திருக்க வேண்டும் என நாவல் படித்த பலர் கூறுகிறார்களே இது குறித்து படமாக பார்க்கும் போது, எழுத்தாளராக நீங்கள் இது சாத்தியம் என நினைக்கிறீர்களா? என கேட்டபோது, “பொன்னியின் செல்வன் நாவலை அவர் கல்கி 60 அத்தியாயங்களாக எழுத தான் திட்டமிட்டார். ஆனால் அது பெரு வெற்றி அடைந்த பிறகு அதை இன்னும் விரிவுபடுத்தினார். 2 திசைகளை நோக்கி அதை விரிவுபடுத்தினார் ஒன்று சேந்தன் அமுதன் - பூங்குழலி கதாபாத்திரத்தின் காதல்... அதை மிக அழகாக விரிவுபடுத்தி பெரியதாக எழுதி இருந்தார். மற்றொன்று ஆதித்த கரிகாலனை கொன்ற பிறகு கொன்றது யார் என்ற மர்மத்தை அடுத்த நூறு பக்கங்களுக்கும் மேல் விரிவு படுத்தி எழுதியிருந்தார். முடிவு இல்லாமல் கொண்டு போனார். நாவல் படித்தவர்களுக்கு தெரியும் அதனுடைய எல்லா ஆட்களுமே நான் தான் கொன்றேன் என சொல்வார்கள். பின்னர் அவர்கள் இல்லை என்று ஆகும். இப்படித்தான் அந்த காட்சி போகும். பின்னர் அந்த கொலை நடந்த காட்சியில் இவர்களெல்லாம் இருந்தார்கள் என சேர்த்துக் கொண்டே இருப்பார். இதெல்லாம் நாவலுக்கு சாத்தியம் சீரியல்களுக்கு சாத்தியம் ஆனால் படமாக எடுக்கும் போது இப்படி எடுக்க முடியாது. ஆதித்த கரிகாலனை கொன்றவுடன் படம் முடிந்தது. அதன் பிறகு நேராக கிளைமாக்ஸ் தான். அதை ஒரு முழு படமாக எடுக்க முடியாது.” என பதில் அளித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…