லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் இதில் உள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை EVP பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு முழுமூச்சில் நடந்து வருகிறது.

நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர்.

இந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குனர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. நடிகர் கமல், தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு சற்று தள்ளி நின்றதால், அவருக்கு எந்த பாதிப்பு இல்லை. காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள சவீதா மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. கமலும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். ராட்சத கிரேனில் அதிக எடைகொண்ட லைட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. உயரத்தைக் குறைக்காமல் கிரேனை இயக்கியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இச்செய்தியினால் மிகுந்த சோகத்தில் உள்ளனர் திரைத்துறையினர். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருந்துகிறது நம் கலாட்டா.