தமிழ் திரையின் முடிசூடா மன்னன் என்பதை விட ரசிகர்களின் உடன் பிறவா அண்ணனாக திகழ்பவர் தளபதி விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடந்துவரும் நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நடந்து வருவதால், தளபதி விஜய்யே நேரில் வந்து இவ்விஷயம் தொடர்பாக விளக்கம் தெரிவிப்பதாக ஓர் தரப்பு கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இன்னொரு தரப்பு கூறுகிறது.