எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது இந்த படம். ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். விரைவில் படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மஹா படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறித்து ஹன்சிகா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

அவரது பதிவில், என்னுடைய 50வது படமான மஹா உடனான தனித்துவமான பயணம் இது. இப்படத்தில் ஆத்மார்த்தமாக வேலை செய்த என்னுடைய சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் கூறுகையில், படத்தின் காட்சிகள் உருவான விதத்தை பார்க்கையில், நிச்சயம் சிம்பு ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக சிம்பு இந்த படத்தில் பைலட் வேடத்தில் நடித்துள்ளாராம்.

Its been a phenomenal journey with my 50th film #Maha. I thank my crew, co-stars, producer for investing their heart and soul into the film. Postproduction work is in full swing and I am extremely happy with the way it's shaping up. @malikstreams @MathiyalaganV9 @dir_URJameel

— Hansika (@ihansika) December 23, 2020