திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமான ட்ராப்சிட்டி படத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் சூரரைப் போற்று ஆல்பம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், இசையமைப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் ஜிவி பிரகாஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடந்து மருத்துவக்குழுவினர் அவரைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே அவர் குணமடைந்து வர வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வோம் என வீடியோ பதிவு செய்துள்ளார் ஜிவி பிரகாஷ். வரும் 20-ம் தேதி மாலை 6 மணிக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பிரார்த்திப்போம் என்று வீடியோவில் பேசியுள்ளார்.

Let's come together and pray for speedy recovery of legendary singer SPB. Be a part of mass prayers on 20 August, 6 pm from your respective places. Let's make sure that his voice is heard again. #GetWellSoonSPBSIR pic.twitter.com/SWcuHScaTA

— G.V.Prakash Kumar (@gvprakash) August 19, 2020