ஆட்டோ சங்கர், திரவம், ஃபிங்கர்டிப், போஸ்ட்மன், இக்ளூ போன்ற அசல் இணையத் தொடர்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்துப் புத்தம்புதிய இணையத்தொடராக டாப்லஸ் வரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி வெளியாகிறது. ஜீ5 தளத்தில் வெளியாகும் இந்த தொடரில் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், பசாக் கஸீலர் பிரசாத், கோகுல் ஆனந்த், மற்றும் ரோஹித் முரளிதரன் ஆகியோர் நடித்துள்ளனர். சோல்ஜர்ஸ்’ ஃபேக்டரி தயாரிப்பில், இயக்குனர் தினேஷ் மோகன் இயக்கத்தில் ஆறு எபிசொடுகளைக் கொண்ட இந்த தொடர், எதிர்வரும் பிப்ரவரி 11ம் தேதி, பிரத்யேகமாக ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

ஒரு அதிரடி இணையத்தொடராக உருவாகியிருக்கும் டாப்லஸ், ஏலத்திற்கு வருகின்ற இங்கிலாந்து ஓவியர் ஒருவரின் ஓவியத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. சந்தர்ப்பவசமாக அது தான் அந்த ஓவியரின் இறுதியாக விஞ்சியிருக்கும் ஒரேயொரு ஓவியம் என்பதால், அந்த ஓவியரின் பேத்தி, அதனை மீட்டு எடுப்பதற்காக இந்தியாவுக்கு வருகிறார்.

எனினும், அந்த ஏலத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத குழப்பத்தில், ஒரு மதச்சார்புடைய அரசியல்வாதி அந்த ஓவியத்தை ஏலத்தில் வென்றேடுத்தும், அதை கற்றுக்குட்டி திருடர்களிடம் பறிகொடுத்து விடுகிறார். ஆனால், ஓவியத்தை கைப்பற்றுவதற்கான இந்த போட்டியும், தகராறும் அந்த ஓவியத்தின் பின் மறைந்துள்ள ரகசியத்தையும், பிரபலத்துவத்தையும் உலகறிய செய்கிறது.

இது குறித்து குரு சோமசுந்தரம் பேசும் போது, இந்த டாப்லஸ் இணையத்தொடர் எனது டிஜிட்டல் திரைப்பயணத்தை துவக்கி வைப்பதால், நான் மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன். இந்த தொடர் ஒரு அருமையான கதை, தேவையான நகைச்சுவை மற்றும் அழுத்தமான திரைகதையுடன் அமைந்திருக்கிறது. இந்த தொடர் உருவாக்கத்தின் போது நான் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே அதன் வெளியீடும் வரவேற்பும் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் என்பதால் அதனை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன்’ என்றார்.

ஜீ5 நிகழ்ச்சி நிரல்களின் தலைவர், அபர்ணா அச்சரேகர், ஜீ5 தரமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருவதற்கிணங்க, தென்னிந்திய ரசிகர்களும் எங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார்கள். எங்களது தளத்தில் இந்த டாப்லஸ் தொடரை வெளியிடுவதில் பெருமைக் கொள்கிறோம். ஒரு அருமையான கதை, ஆகச்சிறந்த நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை கவரத்தக்க அனைத்துமே இத்தொடரில் இடம் பெற்றிருக்கிறது, என்றார்.