இன்றைய சினிமா துறையில் ஒரு இயக்குனர் தனது படைப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து, நீண்ட நாட்கள் சிறந்த இயக்குனராகவே இருக்க இயலுமா ? என்ற கேள்வியை முன்வைத்தால் அடப்போங்கய்யா நீங்களும் உங்க சினிமாவும் என்ற விடை தான் மிஞ்சும். ஆனால் 37 ஆண்டுகளாக அப்டேட்டுடன் காணப்படுகிறார் இயக்குனர் மணிரத்னம். காலத்துக்கு ஏத்த கோலம் என்றால் அது மணிரத்னம் தான். புத்தகம் முதல் மேக்புக் வரை படர்ந்து விரிந்திருக்கும் சினிமா விரும்பிகளின் சென்டிமென்ட்.

பல இயக்குனர்களின் ஃபேவரைட் இயக்குனராக இருப்பதே மணிரத்னமின் சீக்ரெட். குறும்படம் அல்லது வெப் சீரிஸ் எடுத்து விட்டு உடனே சினிமாக்குள்ள வந்துடுறாங்களே என்று புலம்பி தீர்த்தவர்களுக்கு பூகம்பமாக இருந்தவர் மணிரத்னம். 1980களிலேயே யாரிடமும் உதவி இயக்குனராக வேலை பார்க்காமல் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

இன்னொருவர் எழுதிய கதைக்கு, இயக்குனராக மட்டும் கேட்கப்பட்டவர் தான் இந்த மணிரத்னம். வெற்றியாளர்கள் பலரின் கதை இப்படி தான் ஆரம்பிக்கும். அதிக தோல்வியை சந்தித்ததால் சினிமாவை விட்டு விடுகிறேன் என சொல்லி, மௌனராகம் படத்தை இயக்கினார் மணிரத்னம். அதன் பிறகு நடந்த வரலாறு உலகம் அறிந்தது. ஒட்டு மொத்த திரை உலகமும் ஒரு பாதையில் பயணிக்க, அதை பற்றிய எந்த கவலையும் இல்லாமல், தனக்கென ஒரு பாதையை உருவாக்கினார் மணிரத்னம்.

சினிமாவில் பல ட்ரெண்ட்டுகளை கொண்டு வந்ததால் இவரை மணி சார் என்று செல்லமாக திரை விரும்பிகள் அழைக்கத் துவங்கினர். மௌன ராகம் படத்தில் கார்த்திக் ரேவதியை டீ சாப்பிட அழைத்து சொல்வார். இதுதான் தமிழ் சினிமாவின் முதல் டேட்டிங் காட்சி என்று கூறினால் நம்புவீர்களா ? அது தான் மணி சாரின் ட்ரெண்ட் செட்டிங் வித்தை. புது புது நடிகர்களை அறிமுகப்படுத்தியது அல்லாமல் புதிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். உலக அளவில் சிறந்த இசையமைப்பாளராக திகழும் இசைப்புயல் AR ரஹ்மானை அறிமுகப்படுத்திய பெருமையும் இதில் உண்டு.

ஓடும் ரயில், நிற்காமல் பெய்யும் மழை, ஜன்னல் கதவுகளின் கண்ணாடி போன்ற சிறு சிறு விஷயங்களில் அழகு சேர்த்த கதையும் உண்டு. இன்றளவும் மணிரத்னம் படத்தில் வரும் டயலாக் ஓரிரு வார்த்தைகளே இருக்கும். வெளிநாட்டு லொகேஷன் கொண்ட திரைப்படங்கள் வெளியானாலும், நம் நாட்டு லொகேஷன்களை அழகாக செதுக்க துவங்கினார் மணிரத்னம்.

வயது வெறும் நம்பர் தான் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மணிரத்னம். வழக்கம் தாண்டி வித்தியாசம் என்பது தான் மணிரத்தின் ஃபார்முலா. வருங்கால திரை விரும்பிகளின் ரசனையை கணித்து அதற்கு ஏற்ற திரைப்படத்தையும் இவரால் தயார் செய்ய முடியும். இப்படி நம் உணர்வுகளில் கலந்திருக்கும் இயக்குனர் மணிரத்னம் என்றும் சினிமாவின் பொக்கிஷம் தான்.