சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 13 வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்றும் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் தாக்கம் தமிழ் சினிமாவில் நீடிக்கிறது. இயக்குனர் M.சசிகுமார் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள சுப்ரமணியபுரம் திரைப்படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகர் M.சசிகுமார் உடன் இணைந்து நடிகர் சமுத்திரக்கனி, ஜெய், கஞ்சாகருப்பு மற்றும் நடிகை சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதர் ஒளிப்பதிவு செய்த சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்திருந்தார். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக கண்கள் இரண்டால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அன்றைய காலகட்டத்தில் அதிக நபர்களின் காலர் ட்யூனாக இருந்தது.

ஃபிலிம் ஃபேர் விருதுகள் தமிழக அரசின் மாநில விருதுகள் என சுப்ரமணியபுரம் திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. 1980-களில் நடக்கும் கதை களத்தை வைத்து அமைக்கப்பட்ட சிறந்த திரைக்கதையோடு உருவானது சுப்ரமணியபுரம் திரைப்படம். பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வஸேப்பூர் என்ற திரைப்படம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது 13 வருடங்களைக் கடந்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் நினைவுகளை திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான நடிகர் M.சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியபுரம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட மேக்கிங் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

July 4 - The day my debut film 'Subramaniapuram' released. 12 years have gone. Thanks to all those who helped me make this film and those who made it a success. 🙏#13YearsOfSubramaniapuram 😍#Azhgar #paraman #Thulasi pic.twitter.com/CcpZfPDZaA

— M.Sasikumar (@SasikumarDir) July 4, 2021