மலையாள படங்களுக்கென திரை விரும்பிகளிடம் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகள் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. அப்படி சமீபத்தில் அமோகமான வரவேற்பை பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் சச்சி.

இயக்குனர் சச்சிதானந்தன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்தவர். சச்சிதானந்தன் சச்சி என்றும் அழைக்கப்படுகிறார். காமர்ஸில் பட்டம் பெற்ற சச்சிதானந்தன், எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் எல்எல்பி முடித்தார். தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்தார். பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், எழுத்தாளர் சேதுநாத்துடன் இணைந்து மலையாள சினிமாவில் கதையாசிரியராக பணியாற்றினார்.

ஜூன் 15-ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று, வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், திடீரென இன்று ஏற்பட்ட மாரடைப்பால் திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையத்தில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைக்கதை எழுத்தாளராக ரன் பேபி ரன், அனார்கலி, ராமலீலா, டிரைவிங் லைசென்ஸ் போன்ற படங்களுக்கு எழுதியுள்ளார். இயக்குனராக அனார்கலி, அய்யப்பனும் கோஷியும் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது இழப்பு மலையாள திரையுலகின் பேரிழப்பாகும்.