கட்அவுட் கலாச்சாரத்தை முதலில் கொண்டு வந்தது சினிமா தான். அதன் பிறகு தான் அரசியல் வட்டாரத்திற்கு சென்றது. ரஜினி, கமல் எனும் இரன்டு ஜாம்பவான்களின் ஆரம்பகால திரைப்ப்பயணத்தில் தான் இந்த கட்அவுட் பாணி வளரத்துவங்கியது. சரியாக கூற வேண்டுமானால் 80களில் இருந்த திரையரங்குகளை, கட்அவுட் கொண்டு கோட்டையாக மாற்றினார்கள் ரசிகர்கள்.

ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ நாயகர்களின் கட்அவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடுவர். திரையரங்குகளை திருவிழா போல் செய்து படங்களையும், ஹீரோக்களையும் கொண்டாடி வந்தனர். படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சி துவங்கி, படத்தின் கடைசி நாள் வரை இந்த கட்அவுட்டுகள் இருக்கும். படம் சரியாக ஓடாமல் திரையரங்கை விட்டு சென்றாலும், அந்த கட்அவுட்டை எடுக்க விடாமல் ரசிகர்களே வைத்து கொண்ட காலமெல்லாம் தமிழ்நாட்டில் உண்டு.

காகிதத்தில் விளம்பரம், கருப்பு வெள்ளை போஸ்டர், பெயின்டிங் கொண்ட போஸ்டர், பெரிய சைஸ் சுவரொட்டி என்றே இருந்தது. அதற்கு பின் கட்டைகள், கயிறுகள் கொண்டு கட்அவுட்டாக மாறி மலை போல் நிற்கிறது. ஆரம்ப காலத்தில் தினக்கூலி செய்யும் ஓவியர்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. பின்பு ரசிகர்களே தங்கள் ஹீரோக்களுக்காக கட்அவுட்டுகளை உருவாக்கத் துவங்கினர்.

கட்அவுட்டில் முதலில் தோன்றிய பெருமை ரஜினி கமலுக்கே சேரும். இவர்களுக்கு பிறகு கேப்டன் விஜயகாந்த்துக்கு தான் இந்த கட்அவுட் கௌரவம் வழங்கப்பட்டது. கமல் ரஜினி இருக்கும் காலகட்டத்திலே தனக்கான ஓர் இடத்தை பிடித்தவர்.

90களில் திரைப்பயணத்தை துவங்கிய நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா எனும் மும்மூர்த்திகள் தான் இன்று கட்அவுட்களின் காட்ஃபாதராக திகழ்கின்றனர். 2010 துவங்கி 2020 வரை இவர்களின் கட்அவுட் சைஸ்களுக்கு ஏற்ப ரசிகர்களின் வருகை ஆரம்பித்தது. சமீபத்தில் NGK படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு 215 அடியில் கட்அவுட் வைக்கப்பட்டது.

படம் ஓடிக்கொண்டிருக்கையில் கட்அவுட்டுகள் காற்றில் கீழே விழுந்தால் அதை அபசகுனம் என்றெல்லாம் நினைத்தனர். உயரத்திற்கு ஏற்றார் போல் செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். அதனால் ஒருவரே பொறுப்பை ஏற்காமல் ரசிகர்கள் மன்றங்கள் சார்பாக பகிர்ந்து கொண்டு கட்அவுட் வைத்தனர். கட்அவுட்டுகளால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் ஏறி பால் அபிஷேகம், மோர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு தவறி விழுந்த பரிதாபக் கதைகள் ஏராளம்.

ஹீரோக்கள் தங்கள் ரசிகர்களை சந்திக்கும் போது இதுகுறித்து பேசினாலும், வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாலும் ரசிகர்கள் இதை இன்னும் செய்து தான் வருகிறார்கள். அன்பை வெளிப்படுத்த பல வழிகள் இருந்தாலும், இந்த கட்அவுட் கவனம் மட்டும் விட்ட பாடில்லை. எங்க ஹீரோ தான் கெத்து என சோஷியல் மீடியாவில் போர் புரியும் சிறு பிள்ளைகள் மத்தியில், 80களிலே உணவு கூட இல்லாமல் வேலை செய்து கட்அவுட் வைத்துள்ளோம் என்று பெருமை கொள்ளும் திரை மாயையில் தான் வாழ்கிறோம். பல இடங்களில் கட்அவுட்டுகள், பேனர்கள் சரிந்து விழுந்து சாலையில் செல்வோர் மீதும், படத்தை பார்க்க வரும் ரசிகர் மீதும் விழும் சோகக்கதை நம் செவிகளில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.