இந்திய திரைவானில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் கலைஞன் தான் நடிகர் விக்ரம். இந்த தாகம் தீரா கலைஞனை சியான் என்று அன்போடு அழைப்பது தான் எங்கள் வழக்கம். அதுவே திரை விரும்பிகளின் பழக்கம். ஒவ்வொரு மனிதனுக்குள் தனித்தன்மை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தனித்தன்மையைத் தாண்டி கலைஞன் எனும் குணம் இருக்கும். அப்படி அரிதான குணங்களைக் கொண்ட நடிகர் தான் சியான் விக்ரம்.

ஹேட்டர்ஸ் எனும் வார்த்தையின் அர்த்தம் அறியாதவர். இப்போது இருக்கும் டிஜிட்டல் குழந்தைகளுக்கு சியான் விக்ரம் என்றால், கெட்டப் மாற்றும் நடிகர் என்று தான் தெரிந்திருக்கும். அவரது ஆரம்ப கட்ட திரைப்பயணத்தை அழகு பார்த்த பெருமை 90ஸ் கிட்ஸையே சேரும். விதைகள் தான் விருட்சமாகும் என்னும் வாக்கு சியானின் வாழ்வில் உறுதியானது. ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக இருந்தார் என பலருக்கும் தெரிந்திருக்கும். ஆஸ்கர் விருதுகளை குவித்த ரிச்சர்ட் அட்டபரோவின் காந்தி திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்ற வடிவத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்கு குரல் கொடுத்தவர் சியான் விக்ரம் தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

திரைப்பயணத்தில் மூன்று தசாப்தங்களை கடந்தாலும் சியான் விக்ரமிடன் மாறாதது அவரின் இளமை தான்.
விடா முயற்சியின் விளக்கமே விக்ரம். வித்தியாசத்தின் அர்த்தமே விக்ரம். இவரை இந்த உயரத்திற்கு கொண்டு சென்ற சினிமாவிற்கு சியான் விக்ரம் என்ன செய்தார் ??? தனது மகன் துருவையும் சினிமாவிற்கே தந்து விட்டார். சக நடிகர்கள் பலருடன் போட்டியிட்ட சியான் விக்ரம், தற்போது துருவ்வுடன் போட்டி போட உள்ளார். ஆம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கும் சியான் 60 படத்தில் இந்த காம்போ இணைகிறது.

துள்ளலான துருவ் விக்ரம் ஒரு புறம், சிரித்த முகத்துடன் சியான் விக்ரம் மறுபுறம்.. என ரசிகர்களுக்கு டபுள் டமாகா தான். அரங்கமே அதிரும் தருணம். இந்த தருணத்தின் துவக்கத்தை எங்கள் சுவடுகளில் பதிப்பதில் பெருமை கொள்கிறது கலாட்டா.