சுஷாந்த் சிங் மறைவால் பாலிவுட்டில் நெபோடிசம் குறித்த விவாதம் பெரிதளவில் வெடித்தது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், வளர்ந்து வரும் மற்ற நடிகர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வாரிசு நடிகர், நடிகைகளை கடுமையாக விளாசினர். அவர்களை டேக் செய்து மீம்ஸ் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். இதனால் பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இருந்து விலகினர். இந்த விஷயம் பாலிவுட்டை திக்குமுக்காட செய்தது.

நெபோட்டிசம் பற்றியும் வாரிசு நடிகர் நடிகைகளின் நிலை பற்றியும் இயக்குனர் ஆர்.பால்கி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசுகையில், இது முட்டாள்தனமான வாதம். இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. உலகளவில் உயர்ந்த மகேந்திராக்கள், அம்பானிகள், பஜாஜ்கள் பற்றி யோசியுங்கள். அவர்கள் தந்தை தொடங்கிய தொழிலை தான் மகன்கள் தொடர்கிறார்கள்.

ஏன் ஒரு டிரைவர், காய்கறி விற்பவர் கூட தங்களுக்கு அடுத்து தங்கள் தொழிலை தங்கள் வாரிசுகளிடம் கொடுக்கிறார்கள். சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இது இருக்கிறது. இந்நிலையில் சினிமாவில் மட்டும் தான் நெபோடிசம் உள்ளது என்று கூறுவது முட்டாள்தனமான வாதம். நாம், சுதந்திரமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு பேசும் நாம்... ஆலியா பட், ரன்பீர் கபூரை விட சிறந்த நடிகர், நடிகையை கண்டுபிடியுங்க பார்க்கலாம் என்று கேட்போம். வாதிடுவோம். இதுபோன்ற சிறந்த நடிகர்களை அப்படி சொல்வது நியாயமற்றது என்று பேசியிருந்தார்.

இயக்குனர் பால்கியின் இந்த கருத்து குறித்து பேசிய நடிகர் சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார். அதில் இங்கு நிறைய நல்ல நடிகர்கள் உள்ளனர். நான் யாரையும் ஒப்பிட்டு பார்த்து அவமானப்படுத்த விரும்பவில்லை. ஆலியா பட், ரன்பீர் கபூர் மட்டும் தான் சிறந்த நடிகர்கள் என்று கூறுவது நியாயமற்றது. திறமை வாய்ந்த மற்ற நடிகர்களை அவமானப்படுத்தும் வகையில் இது உள்ளது என்று பதிவு செய்துள்ளார். சுரேஷ் கேட்பது நியாயம் தானே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சுரேஷ். ரசிகர்கள் இவரை மைசூர் சுரேஷ் என்று செல்லமாக அழைப்பார்கள். 1980 களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து பட்டையை கிளப்பியவர். பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் அறிமுகமான சுரேஷ், அதன் பிறகு தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார்.

இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணிபுரிந்துள்ளார். சீரியல் உலகிலும் சுரேஷின் நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்தது.