லாட்டரி சீட்டு விபரீதத்தால் 3 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த அருணுக்கு, சிவகாமி என்ற மனைவியும், பிரியதர்ஷினி, யுவஸ்ரீ மற்றும் பிறந்து 4 மாதமே ஆன பாரதி என 3 பெண் குழந்தைகள் இருந்தனர்.

அருண், வீட்டிலேயே சொந்தமாக நகை பட்டரை வைத்து, சிறிய அளவில் நகை செய்யும் தொழில் செய்து வந்தார். ஆனால், அவருக்கு அது கை கொடுக்க வில்லை.

இதனால், 3 ஆம் நம்பர் லாட்டரி சீட்டு வாங்கத் தொடங்கினார். தொடக்கத்தில் அவருக்கு சிறிய அளவில் பணம் வரவே, 3 ஆம் நம்பர் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகி, தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கத் தொடங்கினார். குறிப்பாக, கடன் வாங்கி லாட்டரி சீட்டு வாங்கும் அளவுக்கு அவர் அடிமையாகி போனார். இதனால், அவருக்கு கடன் சுமை அதிகரித்தது. இதனால், கடும் மன உலைச்சலுக்கு ஆளானார்.

இந்நிலையில், நகை தொழிலுக்கு பயன்படுத்த வைத்திருந்த சயனைடை தனது 3 குழந்தைகளுக்கும், கணவன் - மனைவி இருவரும் கொடுத்து கொலை செய்துள்ளனர்.

இதில், சயனைடை உட்கொண்ட 3 குழந்கைளும் உயிரிழக்கும் தறுவாயில் மேல் மூச்சு, கீழ் மூச்சு விட்டு, உயிர் போகும் தருணத்தில் துடித்துக்கொண்டிருக்கையில் அருணும், அவரது மனைவி சிவகாமியும் தங்களது செல்போனில் அதனை படம் எடுத்து, இனிமேல் எங்களைப் போல் யாரும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாக வேண்டாம் என்றும், எங்களை ஏன் இந்த நிலைமைக்கு ஆளாக்கினீர்கள் என்று சமூகத்தைப் பார்த்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோவை தங்களது நண்பர்கள் சிலருக்கு அவர்கள் அனுப்பிட்டு, அதன்பிறகு, அருணும், அவரது மனைவி சிவகாமியும் சயனைடை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இது குறித்து, அருணின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, 5 பேரும் மயங்கிக் கிடந்தனர்.

உடனடியாக அவர்கள் 5 பேரையும் மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் 5 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 பேர் தற்கொலைக்கு காரணமான, 3 ஆம் நம்பர் லாட்டரி சீட்டு நடத்துபவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கடன் சுமையால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.