கள்ளக் காதலால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பல்லரிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் - தமிழ்செல்வி இருவரும், கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு தற்போது 8 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சிவக்குமார் திருக்கோவிலூரில் உள்ள ஒரு உணவகத்திலும், அவரது மனைவி தமிழ்செல்வி அதே பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையிலும் வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்செல்விக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து,உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனைத் தெரிந்துகொண்ட சிவக்குமார், தனது மனைவியை அழைத்துக் கண்டித்துள்ளார்.

இதனையடுத்து, தமிழ்செல்வி தனது கணவர் சிவக்குமாருடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார், மனைவி கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி, சம்பவத்தன்று மாலையில் வேலை முடித்துவிட்டு, தமிழ்செல்வி தனது அம்மா வீட்டிற்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த சிவக்குமார், மனைவியின் கழுத்தை அறுத்து, கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் நின்றவர்கள், சிவக்குமாரைத் தடுத்து நிறுத்தி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தமிழ்செல்வியை, அவரசமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தத்தில் பட்டப் பகலில் கணவனே, மனைவியைக் கொலை செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,