பேஸ்புக்கில் மலர்ந்த காதல், சந்தேகத்தால் தற்கொலையில் முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் அம்முண்டி பகுதியைச் சேர்ந்த 28 வயதானஜாக்லின், தாய் இல்லாத நிலையில், தனது அண்ணனுடன் வசித்து வருகிறார். இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த 33 வயதான விஜயசங்கருக்கும் பேஸ்புக் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டு, நட்பாகி உள்ளது.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி உள்ள நிலையில், வரும் 27 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்திருந்தனர். அதன்படி, இருவரும் வேலூரில் உள்ள விடுதியில் கடந்த 10 நாட்களாகத் தங்கியிருந்த நிலையில், இருவர் மீதும் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகம், இருவரையும் விடுதியை விட்டு வெளியேற்றி உள்ளது.

இதனையடுத்து, ஜாக்லினின் அண்ணன் வீட்டில் இருவரும் தங்கி உள்ளனர். அப்போது, ஜாக்லின் வெளியில் சென்றிருந்த நிலையில், விஜயசங்கர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் ஜாக்லின், விஜயசங்கரின் அழைப்பை
ஏற்காமல், வேறு யாருடனோ வெகு நேரம் போனில் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஜாக்லின் வீடு திரும்பிய நிலையில், இது தொடர்பாக இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஜாக்லின் மீது சந்தேகப்பட்ட விஜயசங்கர், அவரை கழுத்து, மார்பு எனக் கிட்டத்தட்ட 10 இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் வலியால் கத்தவே, வெளியே தூக்கிக்கொண்டிருந்த ஜாக்லினின் அண்ணன் ஓடிவந்து, ஜாக்லினை மீட்டு, அவரை ரூமிலேயே வைத்துப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு புகார் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார், ரூமின் கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது, விஜயசங்கர், ரூமிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணை கொலை செய்ய முயன்ற குற்ற உணர்வில், விஜயசங்கர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், மருத்துவமனையில் ஜாக்லினினுக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பேஸ்புக்கில் மலர்ந்த காதல், சந்தேகத்தால் தற்கொலையில் முடிந்த சம்பவம், அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.